மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு விடுதலையை வலியுறுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்-பைசர் முஸ்தபா தலைமையிலான சட்டத்தரணிகள் உள்ளிட்ட ஐவர் செவ்வாய்க்கிழமை (06) சவூதி அரேபியா பயணமாகின்றனர்.
இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான சட்ட வழிகளை ஆராய, ஐந்து பேர் கொண்ட இலங்கை குழுவினர் நாளை மறுதினம் 06ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் உள்ளிட்ட ஐந்து பேர் இக்குழுவில் இடம்பெறுகின்றனர்.
சவூதி அரேபியாவில் உள்ள சட்டத்தரணிகளை சந்திக்கும் குழுவினர், அனோஜனின் வழக்கு தொடர்பில் கலந்துரையாடுவதுடன், சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டை சமர்ப்பிப்பதற்கான சட்ட நடைமுறைகள் குறித்தும் ஆராயவுள்ளனர்.
சவூதி சட்டத்திற்கு அமைவாக மேன்முறையீடு தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக உள்ளூர் சட்டப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனோஜனுக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தண்டனையை குறைப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.
