சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை

செய்தி வாசிப்பாளர் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தவர் மகாலட்சுமி. இவர், தன்னைப்பற்றி அவதூறான கருத்துகளை சவுக்கு சங்கர் இணையதளத்தில் வெளியிட்டதாக கூறி போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் பெருநகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது.

சவுக்கு சங்கர் தரப்பில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சிவசக்தி, சவுக்கு சங்கர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, அதுவரை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.