எதிரிக்கு ‘தீரா தலைவலி’ கொடுக்க வடகொரியா ஏவுகணைச் சோதனை

எதிரிக்கு ‘தீரா தலைவலி’ கொடுக்க வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியுள்ளது.

தமது எதிரிக்குத் தீராத தலைவலியைக் கொடுக்கும் இலக்குடன் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ஏவுகணைச் சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்திவிட்டதாக அந்நாட்டு கேசிஎன்ஏ அரசு ஊடகம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) தெரிவித்துள்ளது.

அச்சோதனை கடந்த ஞாயிற்றுக்கிழமை, தலைவர் கிம் ஜோங் உன் மேற்பார்வையில் நடந்தது என அந்த ஊடகம் கூறியது.

நாட்டின் தற்காப்புத் துறையின் மேம்பாட்டையும் தயார் நிலையையும் அவர் பாராட்டியதாகவும் அது குறிப்பிட்டது.

“வடகொரிய ஏவுகணை நிர்வாக அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட சோதனை, எதிரிகளுடன் போரிடும் திறன் பன்மடங்கு முன்னேற்றம் அடைந்துள்ளதைக் காட்டுகிறது. அதன் விளைவுகளை எதிரிகள் விளக்கத்தேவையின்றி புரிந்துகொள்வர்,” என்று பெருமிதம் கொண்டார் திரு கிம்.

மேலும் இந்தச் சோதனை எதிரிகளுக்கு ‘தீராத தலைவலி’யைக் கொடுத்து தவிர்க்கமுடியாத கொடூரமான உணர்வைத் தந்திருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

என்ன விதமான ஆயுதங்கள் சோதனையில் பயன்படுத்தப்பட்டன என்பதை ஊடக அறிக்கை விளக்கவில்லை.

ஒலியைவிட ஐந்து மடங்கு வேகமுடைய ‘ஹைப்பர்சானிக்’ வகை ஏவுகணைகள் சோதிக்கப்பட்டிருக்கலாம் என்று தென்கொரியாவின் என்கே நியூஸ் இணைய ஊடகம் தெரிவித்தது.