he anojan

அனோஜனின் பெற்றோர் இன்று ஜனாதிபதியுடன் சந்தித்து உரையாடியுள்ளனர்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையரான சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று நேரில் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு இன்று (21) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் இயன்றளவு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி அப்போது உறுதியளித்துள்ளார்.

அதற்காக சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் இலங்கை அரசாங்கம் தலையீடு செய்யும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, சவூதி மன்னரிடம் இது தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கையை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்தல் உள்ளிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடாக இதுவரை உத்தியோகபூர்வமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு அவரின் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாகவும், உன்னிப்பாகவும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.