முல்லைத்தீவு வைத்தியசாலையின் புதிய கட்டட நிர்மாணப் பணி ஜனாதிபதி தலைமையில் நேற்று (16) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ வார்டுத் தொகுதிக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது நிலவும் நோயாளர் நெரிசலைக் குறைப்பதற்காக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இத்திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
இந்த புதிய வார்டு தொகுதி பல நவீன வசதிகளைக் கொண்டிருப்பதுடன், மின் தூக்கிகள் ,குளிரூட்டி தொகுதிகள், அவசர மின்சாரக் கட்டமைப்புக்கள், தீயணைப்பு கட்டமைப்புகள் மற்றும் குழாய் மூலமான மருத்துவ எரிவாயு விநியோக கட்டமைப்பு (Piped medical gas supply system) போன்ற அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்படும்.
தொற்றா நோய்கள் காரணமாக ஏற்படும் மரணங்களைக் குறைப்பதும், 35 வயதுக்கு மேற்பட்ட நபர்களைப் பரிசோதனைக்குட்படுத்தும் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதன் மூலம் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றுவது மட்டுப்படுத்தப்படும்.
நினைவுப் பலகையைத் திறந்து வைத்து, புதிய வார்டு தொகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மருத்துவமனை ஊழியர்களுடன் சுமுகமான உரையாடலிலும் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ:
எமது நாட்டின் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் மிகக் குறைந்த படுக்கை வசதிகளைக் கொண்ட பொது வைத்தியசாலையாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை காணப்படுகிறது.
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’யை உருவாக்குவதில், இந்நாட்டு மக்களுக்கு ஆரோக்கியமான, சுகாதாரமான வாழ்க்கையை வழங்குவது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும். அதற்கேற்ப இந்த வைத்தியசாலைக்குத் தேவையான கட்டட வசதிகளை வழங்குவதோடு, தேவையான உபகரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுப்போம். எமது
புதிய ஆட்சேர்ப்புகளுக்கு ஏற்ப, அவசியமான ஊழியர்களை முறையாக வழங்குவோம். மூன்றாம் நிலை வைத்தியசாலையென்ற வகையில் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது.
இதனால் பயிற்சி பெறும் வைத்தியர்களை இணைத்துக் கொள்வது மட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, வெளிநாட்டுப் பயிற்சியை நிறைவு செய்து திரும்பும் விசேட வைத்தியர்களை வைத்தியசாலைகளுக்கு வழங்கும் போது, முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு நாம் முன்னுரிமை அளிப்போம்.
இந்த வைத்தியசாலையின் படுக்கை கொள்ளளவை அதிகரிப்பதற்கான உடனடித் தேவை உள்ள நிலையில், நான்கு மாடிகளைக் கொண்ட இந்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக 600 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்.
