மின்மினி மின்ஹாவுக்கு துடிப்புள்ள இளம் ஊடகவியலாளர் விருது

மின்மினி மின்ஹாவுக்கு துடிப்புள்ள இளம் ஊடகவியலாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கல்வி, சமூக சேவையுடன் ஊடகத்துறையில் தடம் பதிக்கும் மின்மினி மின்ஹா
‘துடிப்புள்ள இளம் ஊடகவியலாளர் விருது – 2026’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இளம் வயதிலேயே காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு, சமூக சேவை, கல்வி மற்றும் கல்விசார் புறக்கிருத்திய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதுடன், ஊடகத்துறையிலும் துடிப்புடன் செயற்பட்டு வரும் மின்மினி மின்ஹாவுக்கு ‘Dynamic Young Journalist Award – 2026’ (துடிப்புள்ள இளம் ஊடகவியலாளர் விருது – 2026) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அல்–மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விச் சிறப்பு, கௌரவிப்பு நிகழ்வான ‘PEARLS – SEASON 07’ சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் அண்மையில் (09) நடைபெற்றபோதே இவ்விருது வழங்கப்பட்டது.

அல்–மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஆளுநர் சபைத் தலைவரும், சிலோன் இன்ஸ்டியூட் ஒப் மேனஜ்மென்ட் சயன்சஸ் தவிசாளருமான கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், அல்–மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் நெறிப்படுத்தினார்.

நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரும், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள் மற்றும் கிராமிய மின்சார அமைச்சின் செயலாளருமான இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரி எச்.ஈ.எம்.டபிள்யூ.யூ. திசாநாயக்க கலந்து கொண்டார்.

மாண்புறும் அதிதியாக, கல்முனை கல்வி வலயத்தை இலங்கையின் முன்னணி கல்வி வலயங்களில் ஒன்றாக உயர்த்துவதில் முக்கிய பங்காற்றிய வலயக் கல்விப் பணிப்பாளரும், இலங்கை கல்வி நிர்வாக சேவை மூத்த அதிகாரியுமான எம்.எஸ். சஹதுல் நஜீம் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன், அக்கரைப்பற்று மற்றும் கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார் நளீமி, காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன், இறக்காமம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரசான் நளீமி, கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு உறுப்பினரும், இலங்கை கல்வி நிர்வாக சேவை முதல்தர அதிகாரியுமான ஏ.எல்.எம். முக்தார், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிகா காரியப்பர், கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர், வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்று பொறியியலாளர் இசட்.ஏ. அஸ்மீர் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

அத்துடன், ‘கிழக்கின் கேடயம்’ பிரதானியும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ், மாற்றத்துக்கான சர்வதேச பங்காளிகள் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட ஆலோசகர் ஆசிரியர் றிசாத் செரீப், அல்–மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் இளைஞர் தலைவர் அமீர் அப்னான், கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எம்.ஐ.எம். வலீத், பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.எம். றபீக் உள்ளிட்ட அல்–மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா ஆளுநர் சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள் மற்றும் சாதனை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்வித்துறையில் சிறப்பான சேவையாற்றிய கல்வியாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்கள் உள்ளிட்ட கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற சாதனை மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது, இளம் வயதிலேயே காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், சமூக சேவை, கல்வி மற்றும் கல்விசார் புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் மின்மினி மின்ஹா ஈடுபட்டு வருவது விசேடமாகப் பாராட்டப்பட்டது.