யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் இன்று (11) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக இடையூறு ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டி, மாநகர சபை உறுப்பினர்கள் இன்று (11) அடையாளப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அதிகாரிகளின் செயற்பாடுகளால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது அதிகார வரம்புக்குள் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும், மாநகர சபை ஊடாக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அத்தியாவசிய சேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் அதிகாரிகள் திட்டமிட்டு தாமதங்களை ஏற்படுத்துவதாகவும், மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரங்களில் தலையிட்டு செயற்பாடுகளை முடக்க முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கு எதிராக இன்று நடைபெற்ற சபை அமர்வில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, அதிகாரிகளின் செயற்பாடுகளைக் கண்டித்தும், பிரச்சினையை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கிலும் அடையாளப் பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
