கேகாலையில் தரம் 5 மாணவர்களுக்கு அநீதி

கேகாலையில் தரம் 5 மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேகாலை ஹெட்டிமுல்ல கனிஷ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த புலமைப்பரிசில் பரீட்சை மண்டபத்தில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு முற்பகல் 11:15 மணிக்கு வழங்கப்பட வேண்டிய வினாத்தாள் 15 நிமிடங்கள் தாமதித்தே வழங்கப்பட்டதாக மாணவர்கள் மற்றும் பொற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வினாத்தாள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், வழக்கமான நேரத்தில் வினாத்தாள்களைச் சேகரித்ததால், விடையளிப்பதற்குரிய 15 நிமிடங்களை தாம் இழந்துவிட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாணவர்கள் தெரிவிக்கையில், “சரியாக 11:30 மணிக்குத்தான் வினாத்தாள்கள் கொடுத்தார்கள். ஆனால் 12:15க்கு சரியான நேரத்தில் எடுத்துவிட்டார்கள். மேலதிக நேரமும் தரவில்லை.

அதற்குப் பின்னர் அங்கிருந்த கண்காணிப்பாளர்களிடம் 11:30க்குத்தானே வினாத்தாள் கொடுத்தீர்கள் என்று கேட்ட போது அவர் ‘இல்லை இல்லை 11:15க்குத்தான் கொடுத்தோம், அதனால் இப்போது வினாத்தாளை கொடுங்கள் மீதி வினாக்களுக்கு ஊகத்தின் அடிப்படையில் எதையாவது புள்ளி வைத்துவிட்டுத் தாருங்கள்’ என்று கூறினார்கள்.

எமக்கு சுமார் 11 வினாக்களுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை. 11:35க்குக் கொடுத்துவிட்டு 12:15க்கே வாங்கிவிட்டார்கள்.” என்று மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக பிள்ளைகளின் பெற்றோர்கள் கேகாலை வலையக் கல்வி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் மூலம் விசாரணை செய்யப்பட வேண்டும். ஐந்து வருடங்களாக இந்தப் பிள்ளைகள் கஷ்டப்பட்டுப் படித்தார்கள். அந்த உழைப்பிற்கு ஒரு பெறுமதி இருக்க வேண்டும் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.