பாதுகாப்பு ஒப்பந்தம் சவூதியைக் காப்பாற்றாது!

பாதுகாப்பு ஒப்பந்தம் சவூதியைக் காப்பாற்றாது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

துருக்கி, பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவூதி அரேபியாவுக்கு பாதுகாப்பைத் தராது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அண்டை நாடான பாகிஸ்தானும், சவூதி அரேபியா, துருக்கியும் இணைந்து கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது நடத்தப்படும் தாக்குதல், மற்ற இரு நாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படும்.

சவூதியின் மெக்காவில் உள்ள அல் சபா அரண்மனையில் நடந்த கூட்டத்தின் போது, பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் இந்தக் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதற்கு, ‘மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

எண்ணெய் வளமிக்க சவூதி அரேபியா, அணு ஆயுத பலம் வாய்ந்த பாக். மற்றும் நேட்டோ அமைப்பில் இரண்டாவது பெரிய இராணுவத்தை கொண்டுள்ள துருக்கி ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக ஒரே பாதுகாப்பு குடையின் கீழ் வந்துள்ளன. இது, சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான், துருக்கி, சவூதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பாராளுமன்ற எம்.பி., இப்ராஹிம் ரெசாயி வெளியிட்டுள்ள பதிவில்,

”அமெரிக்காவுக்குப் பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்ச ஆதரவு அளித்தும் பாதுகாப்பு கிடைக்காதது போல, துருக்கி, பாகிஸ்தான் உடனான வெறும் காகித ஒப்பந்தமும் அவர்களுக்குப் பாதுகாப்பைத் தராது என்பதை சவூதி அரேபியா உணர வேண்டும்.

மற்றவர்களிடம் பாதுகாப்பிற்குக் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்படாத வகையில், உங்கள் கொள்கைகளைச் சீரமைத்துக் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.