மஹரை சிறை நிலவரம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மஹர சிறைச்சாலையினுள் பதற்றநிலை ஏற்பட்டது.
இதில் 7 கைதிகள் காயமடைந்து ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கைதி ஒருவர் உயிரிழந்தார்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை, இராணுவம், பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
ஏற்பட்ட பதற்றநிலையைக் கண்காணிப்பதற்காக விமானப்படையினால் பெல் 412 ரக ஹெலிகொப்டர்,ட்ரோன் என்பனவும் ஈடுபடுத்தப்பட்டன.
கைதிகளால் சிறைச்சாலையின் தலைமை சிறை கட்டுப்பாட்டாளரின் அலுவலகத்திற்கும் ஒழுக்கவியல் பிரிவிற்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
நேற்று பிற்பகல் சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்காக உறவினர்கள் சிறைச்சாலைக்குச் சென்ற போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலையினுள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் உறவினர்கள் சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்றுகூடியதுடன், அங்கு அவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் சில பதற்றமான சூழலும் உருவானது.
எனினும், பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
சிறைச்சாலையினுள்ளிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களை ஒத்த சில சத்தங்கள் கேட்டதையடுத்து, கைதிகளைப் பார்வையிட வந்திருந்த உறவினர்களும் அப்பகுதி மக்களும் பொலிஸ் தடைகளை உடைத்துக் கொண்டு செல்ல முற்பட்டனர்.
அதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், அச்சந்தர்ப்பத்தில் கைதிகளைப் பார்வையிட வந்த உறவினர்களும் அப்பகுதி மக்களும் பாதுகாப்புத் தரப்பினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் மஹர பிரதேசத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
அமைதியைப் பேணும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனிடையே, மஹரை சிறை நிலவரம் பற்றிப் பார்வையிடுவதற்காகப் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா, புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்தினா ஆகியோர் நேற்று இரவு சிறைச்சாலை வளாகத்திற்குச் சென்றனர்.
