தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை பற்றி ஜனாதிபதியுடன் பேசுவோம்

தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை குறித்து ஜனாதிபதியுடன் பேசுவோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினை குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் – ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

வடக்கு, கிழக்கு, மலையகம் வாழ் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை வேறானது அன்று. அனைவரும் ஒரே பிரச்சினையையே முகங்கொடுக்கின்றனர் என்று இன்று காவத்தையில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டு சுமந்திரன் கூறினார்.

திங்கட்கிழமை (03) ஜனாதிபதியைச் சந்திக்கும்போது இந்த விடயத்தைப் பிரஸ்தாபிக்கவிருப்பதாக சுமந்திரன் தெரிவித்தார்.

சொந்தமாகக் காணி உள்ள வடகிழக்கு மக்களுக்கும் சொந்தமாகக் காணியில்லாத மலையகம் வாழ் தமிழ் மக்களுக்கும் ஒரே பிரச்சினை தான் காணிப்பிரச்சினை என்று சுட்டிக்காட்டிய சுமந்திரன்,பல தசாப்த காலங்களாக இந்தக் காணிப்பிரச்சினை காணப்படுகின்றது என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவை சந்திக்கும்போது அவரிடம் பிரதான கோரிக்கையாக இந்தக் காணிப்பிரச்சினையை முன்வைக்கவுள்ளதாகவும் திரு. சுமந்திரன் கூறினார்.

ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் ஆறாவது நிறைவு விழா, காவத்தை கிராண்ட் எமரல்ட் சுற்றுலா விடுதியில் இன்று 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சட்டத்தரணி சுமந்திரன் உரையாற்றினார்.

ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி சண்முகம் திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து உரையாற்றிய சட்டத்தரணி சுமந்திரன்:

வடகிழக்கு மக்களின் சொந்தக் காணிகளை இராணுவத்தினரும் இதர தரப்பினரும் கைப்பற்றி வைத்துக்கொண்டு, அதனை விடுவிக்க மறுக்கின்றனர்.

மலையகத்தில் வாழும் தமிழ் மக்களுக்குக் காணிகளை வழங்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். மொத்தத்தில் இலங்கையிலுள்ள வடகிழக்கு மக்களும் மலையகம் வாழ் தமிழ் மக்களும் காணிப்பிரச்சினை காரணமான வாழ வழியின்றித் தவிக்கின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்டு நாட்டிலிலுள்ள தமிழ் மக்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்று சேர்ந்து,நாட்டின் தலைவரான ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவை சந்தித்து, எமது பிரதான கோரிக்கையான காணிப்பிரச்சினையை முன்வைக்கவுள்ளோம்.

இதனை தவிர் அதிகாரப் பகிர்வு,மாகாணசபை தேர்தல் குறித்து கலந்துரையாடவுள்ளளோம். திங்களன்று (03) மாலை எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்து எமது கோரிக்கைகள முன்வைக்கவுள்ளோம்.

ஓன்றிணைந்துள்ள ஆறு கட்சிகளிடம் தீர்க்க முடியாத பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால், தீர்க்கக்கூடிய பிரச்சினைகளுக்காக ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். இதில் தவறேதும் கிடையாது.

மலையகம் வாழ் தமிழ் மக்களுடன் பின்னிப்பிணைந்தது எமது தமிழரசு கட்சியாகும்.

1948 ஆம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்த பின்னர், எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவிருந்த, இலங்கையின் பெரும்பான்மையின ஆட்சி 1949 ஆம் ஆண்டு கொண்டு வந்த பிரஜா உரிமை சட்டமும் இந்திய பாகிஸ்தான் சட்டமும் தமிழ் மக்களுக்கு எதிரானவை.

அவை மூலம் மலையகம் வாழ் தமிழ் மக்கள் பிரஜா உரிமையை இழந்தனர்.

எண்ணிக்கையில் பெரும்பான்மையின ஆட்சி, என்றுமே சிறுபான்மையின மக்கள் மீது அவர்களின் கொள்கைகளை திணிப்பதுவழக்கம்.

இதற்குப் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் துணை போனது.

இதனை எதிர்த்து அக்கட்சியின் உப தலைவரான தந்தை செல்வா என்றழைக்கப்படுகின்ற எஸ். ஜே. வி. செவ்வநாயகம் அக்கட்சியிலிருந்து வெளியேறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ஆ. என். நாகநாதன், வன்னியசிங்கம் ஆகியோருட்ன இணைந்து இலங்கை தமிழரசு கட்சியை ஸ்தாபித்தார்.

தமிழரசுக் கட்சி ஆரம்பிப்பதற்கு பிரதான காரணம் மலையகம் வாழ் தமிழ் மக்களின் பிரஜா உரிமை நீக்கம் தான் என்பதனைத் தெரிவிக்கின்றேன். அப்போது எட்டு இலட்சம் தமிழ் மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டது..

தமிழ் மக்களின் பிரச்சினைகள் பல தீர்க்கப்படாதுள்ளன.வடகிழக்கு, மலையகம் வாழ் தமிழ் மக்கள்,முஸ்லிம் மக்களின் பிர்ச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு, எமது தனிப்பட்ட பிரச்சிகைளை மறந்து, தீர்க்கக்கூடிய பிரச்சினைகளுக்காக ஆறு கட்சிகளும் இணைந்துள்ளன.

இது கூட்டணியன்று;ஒரு கட்சியுமன்று.இவ்வாறு ஆறு கட்சிகள் ஒன்றிணைந்த பின்னர், மலையகப் பகுதியில் நான் கலந்து கொள்ளும் முதலாவது நிகழ்ச்சி இதுவாகும் என்றும் சட்டத்தரணி சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்