கடற்படை மாணவச் சிப்பாய் அதிகாரிகள் நியமனம்

கடற்படை மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்ச்சி கடற்படைத் தலைமையகத்தில் நேற்று (28) நடைபெற்றது.

கடற்படையின் 69 ஆவது மாணவச் சிப்பாய் ஆட்சேர்ப்பின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.

இலங்கை கடற்படையின் நிறைவேற்று, பொறியியல், விநியோகம், கடற்படை காலாட்படை, மின்சாரம், இலத்திரனியல்,ஒழுக்கவியல் ஆகிய பிரிவுகளுக்காக 69 ஆவது மாணவச் சிப்பாய்

அதிகாரி ஆட்சேர்ப்பின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்ட 43 ஆண் மாணவச் சிப்பாய் அதிகாரிகள்,04 பெண் மாணவச் சிப்பாய் அதிகாரிகள் அடங்கலாக 47 மாணவச் சிப்பாய்

அதிகாரிகளுக்கு கடற்படை தளபதியினால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

அப்போது உரையாற்றிய கடற்படைத் தளபதி, 69 ஆவது மாணவச் சிப்பாய் அதிகாரி குழுவிற்காக விண்ணப்பித்த 625 விண்ணப்பதாரர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 47 பேர்,

இலங்கை கடற்படையின் எதிர்காலத் தலைமையை பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த தொழில்முறை பயிற்சியை வழங்கி, ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் தொழில்முறைமை நிறைந்த கடற்படை

அதிகாரிகளாக அவர்களை உருவாக்குவதற்கு கடற்படை அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

கடல்சார் இறையாண்மையைப் பாதுகாத்து, தேசத்தின் கௌரவத்தைக் காப்பதற்காக நேர்மை, தைரியம் மற்றும் பொதுநலத்துடன் தொடர்ந்து பணியாற்றுவது

ஒரு கெளரவமான பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டிய கடற்படை தளபதி, இந்த நியமனக் கடிதம் கடற்படை அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளமாகும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், இளைஞர் மற்றும் யுவதிகளை கடற்படையில் இணைவதற்கு ஊக்குவித்த மாணவச் சிப்பாய் அதிகாரிகளின் பெற்றோருக்கு கடற்படைத் தளபதி தனது நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், இந்நிகழ்வில் கடற்படைத் தலைமை அதிகாரியான ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, துணைத் தலைமை அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல்

புத்திக லியனகமகே உள்ளடங்கலாக பணிப்பாளர் நாயகங்கள், கடற்படைத் தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், கொடி அதிகாரிகள்

மற்றும் புதிய நியமனங்களைப் பெற்ற மாணவச் சிப்பாய் அதிகாரிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்