கிழக்கு சம்மாந்துறை விவசாய அலுவலகத்தை நிரந்தரக் கட்டடத்திற்கு மாற்ற வேண்டும்

சம்மாந்துறை விவசாய அலுவலகத்தை நிரந்தர கட்டடத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஆளும் தேசிய மக்கள் சக்தியின் சிரேஷட உறுப்பினர் வலியுறுத்தினார்.

சம்மாந்துறையில் இயங்கி வரும் உதவி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தை நிரந்தரக் கட்டடத்திற்கு மாற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளும் தேசிய மக்கள் சக்தியின்

சம்மாந்துறை ஒருங்கிணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான வை. பீ. எம். நவாஸ் வலியுறுத்தினார்.

நெல் சேமிப்பிற்கான களஞ்சியசாலையை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் டீ. எம். எஸ். பீ. திசாநாயக்கா தலைமையில், சம்மாந்துறை நெல்லுச் சேனைக் கண்டம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக, கிழக்கு மாகாண விவசாய வீதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை ஒருங்கிணைப்பாளரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான வை. பீ. எம். நவாஸ் உரையாற்றினார்.

சம்மாந்துறை வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன் வழிகாட்டலிலும், சம்மாந்துறை கிழக்கு விவசாயப் போதனாசிரியர் ஏ. எச். பீ. ராஜ கருணா ஏற்பாட்டிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கிழக்கு மாகாண விவசாயத் துறை அமைச்சின் செயலாளர் ஏ. எல். எம். அஸ்மி பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எம். எஸ். ரினோஸ் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர்.

இங்கு உரை நிகழ்த்திய தேசிய மக்கள் சக்தி சம்மாந்துறை ஒருங்கிணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான நவாஸ்:

விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் சம்மாந்துறை விவசாய அலுவலகத்தை நிரந்தர கட்டடத்திற்கு மாற்ற வேண்டும். பல்வேறு அதிகாரிகள் சம்மாந்துறை விவசாயப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுவும் உங்களுக்குப் பிடிக்கலாம்: கலாசார வளர்ச்சியின் அடித்தளம் கலைஞர்களை ஊக்குவிப்பதே!

சிறு தொழில்கள், விவசாய அபிவிருத்திக்காக உரம்,விவசாய உபகரணங்கள் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் உர மானியத்தை ஒரு ஹெக்டேருக்கு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை.

குறைந்தது 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான நெல் உற்பத்தியைப் பாதுகாப்பாக சேமிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மேலும், மாவட்ட,பிரதேச விவசாய அதிகாரிகள் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

இரவு பகலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் விவசாயப் போதனாசிரியர்களும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் உழைக்கும் விவசாயிகளும் சமூகத்தின் உயரிய மரியாதைக்கு உரியவர்கள் என்றும் தெரிவித்தார்.

மின்மினி மின்ஹா

Follow us on Facebook