கராக்கஸ்: வெனிசுவேலா தலைநகர் கராக்கஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் குறைந்தது 164 பேர் உயிரிழந்தனர்; 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆயினும், நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் மக்கள் சிக்கிக்கொண்டதுடன், சக்திவாய்ந்த நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
தலைநகர் கராக்கசிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் 7.2 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது நடந்த ஒரே நிமிடத்தில் மற்றொரு 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் அந்நாட்டை உலுக்கியது.
அதைத் தொடர்ந்து, இலங்கை நேரம் ஜூன் 25 மாலை 6.50 மணி நிலவரப்படி, குறைந்தது 164 பேர் மாண்டுவிட்டதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர், மாண்டோர் எண்ணிக்கை அதிக அளவு இருக்கும் என்று அஞ்சுகின்றனர். பல கட்டடங்கள் இடிந்து விழுந்துவிட்டன.
அமெரிக்கப் புவியியல் ஆய்வக விஞ்ஞானிகள் (USGS) பல்லாயிரக் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தில் மரணமடைந் திருக்கலாம் என்று கருத்துரைத்தனர். நாடு முழுவதும் நிலநடுக்கம் பாதித்துள்ளதால் 10,000 முதல் 100,000 பேர் வரையில் அதில் மாண்டிருக்கலாம் என்று அவர்கள் கணித்துள்ளனர்.
“கட்டடங்களும் வீடுகளும் இடிந்துள்ளன. எங்களால் முடிந்த அளவு பொதுக் கட்டமைப்புகளைக் கொண்டு செயலாற்றிவருகிறோம். அனைத்துக் காவல்துறை, தீயணைப்புப் படை அதிகாரிகளும் உதவி வருகின்றனர்,” என்று வெனிசுவேலாவின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடொ கபெலோ தேசியத் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
இதனிடையே, வெனிசுவேலா அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்நாட்டுக்குத் தேவைப்படும் உதவிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் கிரிஸ்தஃபர் லன்டாவ் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
பேரிடர் உதவிக் குழு, அத்தியாவசியப் பொருள்களை வெனிசுவேலா மக்களுக்கு வழங்கும் சிறப்பு செயல்குழு ஆகியவற்றை உடனடியாக அமைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.
