தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் தேவை என்பதை ஆளுநர் மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால், விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில், காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரினார்.
இதன் தொடர்ச்சியாக, 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் விஜய்யிடம் தங்கள் ஆதரவுக் கடிதத்தை 6-ம் தேதி வழங்கினர். இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுக் கடிதத்துடன் அன்றைய தினமே ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாததால், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில், விஜய் நேற்று காலை மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநரை சந்தித்தார். அப்போது, சட்ட நுணுக்கங்களுடன் கூடிய பல்வேறு ஆவணங்களை விஜய் அளித்துள்ளார்.
ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுமார் 40 நிமிடங்கள் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது ஆளுநர் அர்லேகர், ‘‘ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன்பே, அதற்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது’’ என்று உறுதிபட தெரிவித்தார்.
