வலுசக்தி அமைச்சரும் செயலாளரும் இராஜினாமா

ளுளுநிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்து தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (17), நிலக்கரி இறக்குமதி, அது சார்ந்த மின்சார உற்பத்தியின் போது முறைகேடுகள், சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணை நடவடிக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர், அமைச்சின் செயலாளர் ஆகியோர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.

தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, நிலக்கரி விநியோகம் தொடர்பாக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க எடுத்த தீர்மானத்தையும், 2009ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற நிலக்கரி இறக்குமதிகள் குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் மூலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளமை மூலம் ஊழலுக்கு எதிராகவும் மக்கள் ஆணையை நிறைவேற்றுவதிலும் ஜனாதிபதி கொண்டுள்ள துணிச்சலான உறுதியை தாம் பாராட்டுவதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.