கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தைச் சர்வதேச தரத்திலான போக்குவரத்துப் பரிமாற்ற மையமாக நவீனமயமாக்கும் பாரிய திட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று 9 உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதிப் பங்களிப்பும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக 2,162 மில்லியன் ரூபாக்கும் அதிக நிதி முதலீடு செய்யப்படகிறது.
அடுத்த 15 மாதங்களுக்குள் பணிகளை நிறைவு உத்தேசிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் ஊடாக, தினசரி ரயில் சேவையைப் பயன்படுத்தும் இலட்சக்கணக்கான பயணிகளுக்கு உயர் தரத்திலான சேவையை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
பாரம்பரிய முறைகளுக்குப் பதிலாக நவீன தானியக்க பயணச்சீட்டு வழங்கல் முறைமைகளை அறிமுகப்படுத்துதல், விசேட தேவையுடையோர்,முதியோர் தடையின்றிப் பயணிக்கும் வகையில் நவீன மின்தூக்கிகள்,மேம்பாலக் கட்டமைப்புகளை நிர்மாணித்தல், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய கட்டடத் தொகுதிகள், உயர் தரத்திலான சுகாதார வசதிகளை நிறுவுதல் ஆகியன உள்வாங்கப்பட்டிருக்கின்றன.
இத்திட்டம் பூர்த்தி செய்யப்படும்போது கொழும்பு கோட்டை புகையிரத நிலையமானது பயணிகளை மையப்படுத்திய, வினைத்திறனான,நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரதான போக்குவரத்து மையமாக மாற்றமடையும்.
