சம்பளத்தை மீளச் செலுத்தக்கோரி ஜேவிபி முன்னாள் எம்பி சட்ட நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதால், ஜேவிபி பிடித்து வைத்துள்ள தனது முழுச் சம்பளப் பணத்தையும் கோரி சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே தெரிவித்துள்ளார்.

தான் 1997 முதல் 2010 வரை ஒரு பிரதேச சபை உறுப்பினராக, மாகாண சபை உறுப்பினராகப் பதவி வகித்துப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியதாகவும் அந்த முழுக் காலப் பகுதியிலும் தனக்குரிய சம்பளப் பணமும் ஜேவிபியின் கட்சி வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், மாகாண சபையில் இருந்தபோது அரசாங்கம் வழங்கிய தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரததையும் கட்சி பெற்றுக்கொண்டதாகவும் தி டெய்லி மோர்னிங் ஆங்கிலப் பத்திரிகைக்கு நேற்று (18) தெரிவித்துள்ளார்.

வாகன பர்மிற் தவிர்த்து எல்லாமாகத் தமக்கு 6.8 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள பிரேமசிறி, இந்தத் தொகை இருந்திருந்தால் வட்டியாவது கிடைத்திருக்கும். இப்போது ஓய்வூதியம் இல்லாததால், வாழ்வதற்குக் கஷ்டமாக உள்ளது.

ஆகவே, இந்தப் பணத்தை மிளச் செலுத்துமாறு கட்சியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் கோரிக்கைக்குச் செவிசாய்க்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க சட்டத்தரணிகளிடம் ஆலோசித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

தன்னைப்போல் இன்னும் 25 முன்னாள் உறுப்பினர்களும் சட்ட நடவடிக்கைக்குத் தயாராகுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வி. அருள்செல்வன்