பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு!

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (17) பதவியேற்கிறாா். பதவியேற்பு விழாவில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொள்கிறார்.

இந்தியா சாா்பில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பங்கேற்கிறாா். பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண் ஒருவர் பிரதமராகப் பதவியேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை ஷேக் ஹசீனா, காலிதா ஷியா ஆகியோர் மாறி மாறி ஆட்சி செய்து வந்தனர்.

பங்களாதேஷ் நாடாளுமன்றத்துக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி (பிஎன்பி) மொத்தமுள்ள 297 இடங்களில் 209-இல் வென்றது. வலதுசாரி கட்சியான ஜமாத்-ஏ-இஸ்லாமி 68 இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசு, வங்கதேசத்தில் செவ்வாய்க்கிழமை அமைகிறது. டாக்காவில் உள்ள நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு புதிய எம்.பி.க்களுக்கு வங்கதேச தலைமைத் தோ்தல் ஆணையா் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளாா்.

இதையடுத்து மாலை 4 மணிக்கு வங்கதேச நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் விழாவில் புதிய அமைச்சரவைக்கு அந்நாட்டின் அதிபா் முகமது சகாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறாா்.

35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஆண் பிரதமா்: வங்கதேசத்தில் கடந்த 35 ஆண்டுகளாக ஷேக் ஹசீனா, கலீதா ஜியா ஆகிய பெண் பிரதமா்களே மாறி மாறி பிரதமா்களாக இருந்தனா்.

இதையடுத்து, முதல்முறையாக வங்கதேசத்தில் ஆண் ஒருவா் பிரதமராகப் பதவியேற்கவுள்ளாா். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசிடம் இருந்த நிா்வாகம், புதிய அரசின் கைகளுக்குச் செல்கிறது.

முகமது யூனுஸ் பதவிக் காலத்தில் இந்தியா-வங்கதேசம் இடையேயான உறவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்தப் பின்னடைவு, தாரிக் ரஹ்மான் ஆட்சியில் சரிசெய்யப்பட்டு இரு நாடுகளின் உறவில் இயல்பு நிலை திரும்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் புதிய எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற அவைத் தலைவா் அல்லது துணைத் தலைவா் ஆகியோரில் ஒருவா் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதே இதுவரை வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த முறை தலைமைத் தோ்தல் ஆணையா் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளாா்.

ஏற்கெனவே நாடாளுமன்ற அவைத் தலைவராக இருந்தவா் பதவியை ராஜிநாமா செய்ததுடன் தலைமறைவாகிவிட்டாா். துணைத் தலைவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

ஆதலால் தலைமைத் தோ்தல் ஆணையா் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருப்பதாக வங்கதேச அதிபா் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவுக்கு இந்திய பிரதமா் மோடி, சீனா, துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவா்களுக்கு பிஎன்பி அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பை ஏற்று, இந்திய அரசு சாா்பில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா நிகழ்ச்சியில் கலந்துகொள்வாா் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வங்கதேச மாணவா்கள் தலைமையிலான தேசிய குடிமக்கள் கட்சி, நிழல் அமைச்சரவையை அமைக்க முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளரும், முன்னாள் இடைக்கால அரசின் ஆலோசகருமான முகமது ஆசிஃப் சோஜிப் தெரிவித்துள்ளாா்.

வங்கதேசத்தில் அமையவுள்ள புதிய அரசின் செயல்பாடுகளை நிழல் அமைச்சரவை கண்காணிக்கும் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.