இந்தியா-பாகிஸ்தான் ரி-20 பரபரப்பான போட்டி இன்று

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியாபாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, திட்டமிட்டபடி இன்று (15) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது.

இரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இப்போட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகிறது. இந்தப் போட்டி மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுவதால், அணி வீரர்கள், ரசிகர்கள் பாதுகாப்பு கருதி இர நாடுகளின் பாதுகாப்புப் பிரிவினர் கொழும்பு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இத்தொடரின் ‘A’ குழுவிற்கான போட்டியாக நடைபெறுகின்றது.

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறுமா இல்லையா என்பது குறித்து பெரும் சர்ச்சை நிலவியது.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் நெருக்கடி தீவிரமடைந்தமையே இதற்குக் காரணமாக அமைந்திருந்தது.

இந்தப் போட்டியை புறக்கணிப்பதாக முன்னதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்த போதிலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கோரிக்கையின் அடிப்படையில் பாகிஸ்தான் விளையாடுவதற்குத் தீர்மானித்தது.

இந்நிலையில், போட்டிக்கான அனைத்து டிக்கட்டுக்களும் நேற்றைய தினம் விற்றுத் தீர்ந்துள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே ரசிகர்கள் டிக்கட் பெறும் நோக்கில் வரிசையில் நிற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இன்றைய கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்காக 2000 பொலிஸாரும் 600 போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இதுதவிர முப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.