மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் இன்று (13.02.2026) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த புவனசிங்கம் – சறோசாதேவி என்பவரின் வீடே இவ்வாறு தீக்கிரையானது.
வீட்டின் உரிமையாளர் அயல் வீட்டில் நின்றுகொண்டிருந்த வேளையில், திடீரென வீடு பற்றி எரிவதைக் கண்ட அயலவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.
விரைந்து வந்து பார்த்தபோது வீடு கட்டுப்பாட்டை மீறி எரிந்துகொண்டிருந்தது.
இந்த தீ விபத்தின் போது வீட்டைச் சோதனையிட முயன்ற வீட்டின் உரிமையாளருக்கு முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் தீயினால் முற்றாக அழிந்துள்ளன.ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, வீட்டில் ஏற்பட்ட மின்னொழுக்கே இந்த விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து அறிந்ததும் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன், உப தவிசாளர் த. கயசீலன் மற்றும் வட்டார உறுப்பினர் பா. அனோஜன் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சேத விபரங்களையும் கேட்டறிந்தனர்.
மேலும், களுவாஞ்சிக்குடி மின்சார சபையினர் மற்றும் வெல்லாவெளி பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சா. நடனசபேசன்


