கெஹலியவுக்கு எதிரான வழக்கு ஏப்பிரல் 27இல் விசாரணை

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை எதிர்வரும் ஏப்பிரல் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாகக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) அறிவித்துள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்பொது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி காஞ்சன ரத்வத்த ஆகியோர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, வழக்கினை ஏப்ரல் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கத் தீர்மானித்தார்.

அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கெஹலிய ரம்புக்வெல்ல ஊடக, சுகாதார, சுற்றாடல் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முறையற்ற வகையில் சொத்துகளை ஈட்டியதாக சட்ட விரோத பணப்பரிமாற்றத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராகத் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.