மஸ்கெலியா கவரவலை தோட்டத் தொழிலாளர்களின் ஒரு வாரகால சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று பெப்ரவரி 12ஆம் திகதி முடிவுக்கு வந்துள்ளது. நாளை (13) முதல் வேலைக்குத் திரும்ப தொழிலாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எனினும், வேலை இல்லாமல் இருந்த நாள்களுக்குரிய சம்பளத்திற்கு எந்த உத்தரவாதமும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அப்படி வழங்காவிட்டால் நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று போராட்டத்தை முடித்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச் செல்வி தெரிவித்திருக்கிறார்.
வேலை நிறுத்தம் செய்யப்பட்டால் தொழில் திணைக்களத்தின் ஊடாகவோ தொழில் நியாயமன்றின் ஊடாகவோ நடவடிக்கை எடுக்க முடியும். அதற்குத்தான் ஒரு தொழிற்சங்கம் அவசியம்.
வேலை நீக்கம் செய்யப்பட்டதற்கெலலாம் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்த வேண்டியதில்லை என்பதையே கடந்த பெப்ரவரி ஐந்தாம் திகதிய செய்தியில் மலைக்குருவி சுட்டிக்காட்டியிருந்தது.
சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்று மலைக்குருவி சொன்னது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
சுருங்கற் சொல்லின் சத்தியாக்கிரகப் போராட்டமும் உண்ணாவிரதப் போராட்டமும் புஸ்வாணமாகிப்போயுள்ளது என்பதே உண்மை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் தொழில் இடையில் முடிவுறுத்தப்படாமலும் அதாவது without break in service வேலை இழந்த நாள்களுக்கான சம்பளத்துடனும் – Back Wages வேலை மீண்டம் வழங்கப்பட்டிருந்தால், அதனை போராட்டத்தின் வெற்றியாகக் கருத முடியும்.
ஆகவே, இன்றைய முடிவ என்பது போராட்டத்திற்கும் தொழிசங்கத்திற்கும் ஒரு தோல்வி என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.
ஏனென்றால், இதற்குப் பின்னராவது எதீர்காலத்தில் அர்த்தமற்ற போராட்டங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டுத் தமது வவாழ்வாதாரத்தை இழக்காமல் இருக்க வேண்டும்.
ஹொரணை பிளான்டேசன் நிறுவனத்தின் கீழ் உள்ள மஸ்கெலியா சாமிமலை கவரவில தோட்டத்தில் தொழிலாளர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (12) முதல் முடிவடையும் என்றும், நாளை (13) முதல் வழக்கம் போல் பணிக்குத் திரும்புவார்கள் என்றும் போராட்டத்தில் பங்கேற்ற தோட்டத் தொழிலாளர்கள் எட்டுப் பேர் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளருமான திருமதி கிருஷ்ணன் கலைச்செல்வி இன்று (12) காலை போராட்ட இடத்திற்குச் சென்று, போராட்டகாரர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்குக் குடிக்க பால் கொடுத்தது மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்
தோட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்கள் கொழுந்து பறிக்க தோட்டத்தில் இருந்ததாலும், பதிவு செய்யப்படாத தொழிலாளர்களை நிர்வாகம் பணிக்கு அமர்த்தியதால் எட்டுத் தொழிலாளர்கள் முரண்பட்டனர். அதனால் அந்த எட்டுப்பேருக்கும் 2025.12.23 முதல் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டனர். தமக்கு சம்பளத்துடன் வேலை வழங்குமாறு எட்டுப்பேரும் சத்தியாக்கிரகம் மேற்கொண்டனர்.தொழிலாளர்களின் பிரச்சினை தீர்க்கப்படாததால், மூன்று நாள்களுக்கு முன்னர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். .
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூன்று பேர் நேற்று 11 ஆம் திகதி மயங்கிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற 08 தோட்டத் தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த நிரவாகம் ஒப்புக்கொண்டு, விரைவில் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறியுள்ளது.
எட்டுத் தொழிலாளர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டு நாளை13 ஆம் திகதி வேலைக்குத் திரும்ப முடிவு செய்ததாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளருமான திருமதி கிருஷ்ணன் கலைச்செல்வி, உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்கள் 50 நாட்களாக சேவை நிறுத்தப்பட்டதால் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளதாகவும், ஒரு சிறிய பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தோட்ட நிர்வாகத்தின் தன்னிச்சையான போக்கினால் தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
தொழிற்சங்கத் துறையைப் பிரதி நிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அரசியல் இலாபங்களுக்காக இந்த த்தோட்டத் தொழிலாளர்களை சந்தர்ப்பத்திற்காகத் தவறாக வழிநடத்தியுள்ளனர்,
மேலும் நாளை (13) வேலைக்குத் திரும்பும் இந்த 08 தோட்டத் தொழிலாளர்களின் இழந்த உரிமைகளை தோட்ட நிர்வாகம் வழங்காவிட்டால், சட்ட நடவடிக்கை மூலம் அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று திருமதி கிருஷ்ணன் கலைச்செல்வி கூறினார். இதனையே மலைக்குருவி கடந்த ஐந்தாம் திகதி சுட்டிக்காட்டியிருந்தது.
மஸ்கெலியா பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் குழுத் தலைவர் அவிஷ்கா வீரதுங்க, பிரதேச சபை உறுப்பினர்களான ஆசீர்வதன் எலிஸ்டன், மண்டகலா குகனேஷன் ஆகியோரும் இந்தச் சந்தர்ப்பத்தில்ல் பங்கேற்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


