கலா ஓயா வெள்ள மீட்பு கடற்படை வீரர்களை கௌரவிக்க கோரிக்கை

டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்குத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் திங்கட்கிழமை (08.12.2025) கடிதமொன்றைக் கையளித்தனர். 

ஆளுநர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பல்கலைக்கழக மாணவர்களின் உடல் மற்றும் உள நலம் குறித்து ஆளுநர் விசாரித்தறிந்தார். 

அதனைத் தொடர்ந்து, பேரிடரின்போது தாம் எதிர்கொண்ட சவாலான அனுபவங்களை மாணவர்கள் ஆளுநருடன் பகிர்ந்துகொண்டனர். இதன்போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்களது சக பயணி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் சடலமாக மீட்கப்பட்ட துயரச் சம்பவம் குறித்தும், அந்தத் தருணத்தில் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடி நிலை குறித்தும் ஆளுநரிடம் விவரித்தனர். 

மேலும், மீட்புப் பணிகளுக்காக வருகை தந்த மூன்று கடற்படை வீரர்கள், வெள்ளம் சூழ்ந்த அந்த ஆபத்தான சூழலில் 24 மணி நேரத்துக்கும் மேலாகத் தம்முடன் தங்கியிருந்ததோடு, வெள்ளத்தில் வீழ்ந்த சிலரையும் உயிருடன் மீட்டனர் என்பதையும் மாணவர்கள் ஆளுநரிடம் நினைவுகூர்ந்தனர். இத்தகைய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அந்தக் கடற்படை வீரர்களைச் சிறப்பிக்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் பரிந்துரைக்குமாறும் மாணவர்கள் ஆளுநரிடம் விசேட வேண்டுகோள் விடுத்தனர்.