மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை

அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். 

கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (06) நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 

மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றத்தை இதன்போது ஜனாதிபதி தனித்தனியாக மீளாய்வு செய்தார். 

வீதிக் கட்டமைப்பு நிரந்தரமாக அமைக்கப்படும் வரை, அடுத்த 25 நாட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, வீதிப் புனரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

மாவட்டத்தில் நீர் விநியோகத்தை 03 நாட்களுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவருமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அதுவரை மக்களின் நீர் தேவைகளை பவுசர்கள் மூலம் பூர்த்தி செய்யுமாறும், இந்த நடவடிக்கைகளில், வழக்கமான செயல்முறைக்கு அப்பால் சென்று, அவசரநிலையாகக் கருதி, முப்படையினரிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெறுமாறும் அறிவுறுத்தினார்.