டித்வா புயலின் கோர தாண்டவத்தினால் நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமைகளைக் கருத்திற்கொண்டு வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிப்புற்ற மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் முகமாக பல்வேறு பிரதேசங்களிலும் பலதரப்பட்ட அமைப்புகளினால் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மட்டக்களப்பு புளியந்தீவு இளைஞர்களால் இன்றைய தினம் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணிகள் ஆனைப்பந்தி ஆலய சந்தியில் மேற்கொள்ளப்பட்டன.
மக்களில் அவல நிலை உணர்ந்து இளைஞர்கள் தானாக முன்வந்து இச்செயற்பாட்டினை முன்னெடுப்பதுடன், ஒவ்வொரு நாள் சேகரிக்கும் பொருட்களை உரிய தினத்தில் மண்முனை வடக்குப் பிரதேச செயலாளரிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தப் பணிக்கு பிரதேச மக்கள் மற்றும் வீதியால் பயணிக்கும் பிரயாணிகள் ஆர்வத்துடன் வருகை தந்து உதவிகள் புரிவதுடன் இளைஞர்களின் இத்தகு செயற்பாடுகளைப் பாராட்டிச் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சா. நடனசபேசன், மட்டக்ககப்பு
