மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளை ஜனாதிபதி இன்று (28) முற்பகல் முப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு சந்தித்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதி, “இந்தச் சவாலான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் திறம்படச் செய்வதற்காகத் தேவைப்பட்டால் அவசர காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது முன்மொழிந்தனர்,
மேலும் அதற்குத் தமது முழு ஆதரவையும் வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிவாரணப் பணிகளுக்கு பணம் ஒரு தடையல்ல என்று இதன்போது குறிப்பிட்ட ஜனாதிபதி, அனர்த்த முகாமைத்துவ மாவட்டக் குழுக்கள் தற்போது அழைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டச் செயலாளர்களுக்குத் தேவையான நிதியை ஏற்கனவே விடுவித்துள்ளதாகவும், அந்த நிதியைப் பயன்படுத்துவதற்கு எந்தச் சுற்றறிக்கையும் தடையாக இருக்காது என்றும் தெரிவித்தார்.
