கொட்டாஞ்சேனையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்தின் முன்னாள் கமாண்டோ வீரர் என்றும், கூலி கொலையாளியாக செயற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கொலை தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்த வந்த காரின் ஓட்டுநர், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு தங்குமிடம் வழங்கிய நபர், ஓட்டுநருக்கு தங்குமிடம் வழங்கிய இரண்டு பேர் மற்றும் அவருக்கு ஆதரவளித்த நபர்கள் சந்தேக நபர்களில் அடங்குவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 7 ஆம் திகதி இரவு கொட்டாஞ்சேனை, கொலேஜ் வீதி , 16 வது ஒழுங்கையை சேர்ந்த புத்திக பெர்னாண்டோ என்ற நபர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மஹியங்கனை பகுதியில் மறைந்திருந்தபோது இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு கூலி கொலையாளி என்றும், பழனி ரெமோஷன் என்ற நபர் கொடுத்த ஐந்து இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் பேரில் இந்தக் கொலை நடந்ததாகவும், அதற்காக சந்தேக நபர் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே பெற்றதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது
