ஷொப்பிங் பைக்கு இன்று முதல் பணம்: அமுலுக்கு வந்தது சிலி சிலி வர்த்தமானி

இரண்டு கைப்பிடிகள் கொண்ட பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் இன்று (நவம்பர் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது. 

இதற்கமைய, இனிவரும் காலங்களில் பாவனையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது, கடைகள் ஷொப்பிங் பைகள் போன்ற கைப்பிடி கொண்ட பொலிதீன் பைகளுக்கு ஒரு விலையை அறவிட வேண்டும். 

பொலிதீன் பயன்பாட்டினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்குடன், பொலிதீன் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம், 

இனிமேல் வர்த்தக நிலையங்களில் பொலிதீன் பைகள் இலவசமாக வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளார். 

ஷொப்பிங் பைக்குப் பணம் யார் கொடுப்பார்?

பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டிருக்கும் நடைமுறை முட்டாள்தனமானது என்று நுகர்வோர் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இலவசமாகக் கொடுக்கப்படும் பைக்குப் பணம் கொடுக்க வேண்டுமானால், நுகர்வோர் கொள்வனவு செய்யும் பொருளுக்குக் கூடுதல் பணம் செலுத்த வேண்டும் அல்லவா என்கிறார்கள் அவர்கள்.

170 ரூபாய் வெங்காயம் ஒரு கிலோவை வாங்குவதென்றால், இன்று முதல் சில ரூபாய்களை அதிகமாக செலுத்த வேண்டிவருமே, அந்தப் பணத்தை யார் தருவார்கள் என்று கேட்கிறார்கள் நுகர்வோர்.

என்னவோ, பெரிய வெங்காய கொள்வனவிற்காக விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் விசித்திரமான நிபந்தனைபோன்று இந்தச் சிலி சிலி விடயமும் முட்டாள்தனமானது என்பது நுகர்வோர் சிலரின் கருத்தாக உள்ளது.

மதிமுரசுக்காக ஜீவிதன்