பணமும் புகழும் எனது தேர்வல்ல

பணமும் புகழும் எனது தேர்வல்ல என்று நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்த ‘இட்லி கடை’ படம் வெளியாகிவிட்டது.

அடுத்து காமினி இயக்கத்தில் ‘டியர் எக்ஸஸ்’, விவேக் ஓபராயுடன் ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் கிரே’, மனோஜ் பாஜ்பாயுடன் ‘மசூம் தி நியூ ஜெனரேஷன்’ ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் நித்யா மேனன். இவை தவிர, மேலும் சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.

திரையுலகில் அறிமுகமாகி 15 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நித்யா, ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

“மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று ஓரிரு வார்த்தைகளில் கூறிவிட முடியாது. விருது குறித்த அறிவிப்பானது, பெருமையையும் மகிழ்ச்சியும் ஒருசேர அளித்த தருணம். 15 ஆண்டுகளில் 60 படங்களில் நடித்து முடித்துள்ளேன்.

“நான் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் ஏற்று நடித்த ‘ஷோபனா’ கதாபாத்திரத்தைப் போல் இதுவரை என் வாழ்க்கையில் ஒரு பெண்ணைச் சந்தித்ததே இல்லை. மிக வித்தியாசமாக, அதிகமாகப் பேசி எதையும் எதார்த்தமாக எதிர்கொள்ளும் கதாபாத்திரம் அது. முதலில் நானே அப்படிப்பட்ட பெண் அல்ல.

“எனக்கு கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லாத ஒரு வேடத்துக்காக என்னை நானே தயார் செய்துகொள்ள சற்று மெனக்கெட்டேன். அந்த வேடத்தைவிட ‘இட்லி கடை’ கயல் கதாபாத்திரம் இன்னும் எதார்த்தமானது.

“இதுவரை நான் நடித்த பல்வேறு பாத்திரங்களில் இருந்து மிகுந்த வித்தியாசங்களுடன் உருவாக்கப்பட்ட உணர்வுபூர்வமான கதாபாத்திரம். பார்ப்பவர்களை அழவைக்கும் அளவுக்கு இருக்கும் அழுத்தமான, அதேசமயம் கொஞ்சம் குறும்புத்தனமும் வெளிப்படும்,” என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் நித்யா மேனன்.