பிஃபா உலகக் கிண்ண உத்தியோகபூர்வ பந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணப் போட்டியில் பயன்படுத்தப்படவுள்ள புதிய தொழில்நுட்பத்துடனான பந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டியொன்டா என்ற பெயரில் அடிடாஸ் நிறுவனம் உருவாக்கி இருக்கும் இந்தப் பந்தில் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவை போட்டியை நடத்தும் மூன்று நாடுகளின் பிரதிபலிப்பு வண்ணங்களாக உள்ளன. அது மட்டுமன்றி கனடாவின் இலை, மெக்சிகோவின் கழுகு மற்றும் அமெரிக்காவின் நட்சத்திரம் ஆகிய மூன்று சின்னங்களும் அந்தப் பந்தில் இடம் பெற்றுள்ளன.
பந்துக்குள் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் சிப் பந்தின் வேகம், சுழற்சி ஒவ்வொரு சிறிய அசைவுகளையும் நொடிக்கு 500 முறை பதிவு செய்து, மைதானத்தை சுற்றியுள்ள கணினிகளுக்கும் அனுப்புகிறது.
இந்த தொழில்நுட்பம் ஆட்டத்தை மேலும் நேர்மையானதாக மாற்ற உதவும் என்று அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீரர்கள் கூட்டமாக இருக்கும்போது நடுவர்களின் பார்வையில் இருந்து மறைக்கப்படும் ‘ஹேண்ட்போல்’ போன்ற தவறுகளைக் கூட இந்த சென்சார் துல்லியமாக கண்டறிந்துவிடும்.
2022 ஆம் ஆண்டு கட்டார் உலகக் கிண்ணத்தில் பயன்படுத்தப்பட்ட ‘அல் ரிஹ்லா’ பந்தில் இருந்த தொழில்நுட்பத்தின் மேம்பட்ட பதிப்பாக இந்த பந்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 பிஃபா உலகக் கிண்ணம் எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஆரம்பமாகவிருப்பதோடு, 48 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் உலகக் கிண்ண வரலாற்றில் மிகப்பெரிய தொடராக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
