ஆசியக்கிண்ணத்தை  ஒப்படைக்க பாகிஸ்தான் நிபந்தனை

ஆசியக்கிண்ணத்தை  ஒப்படைக்க பாகிஸ்தான் நிபந்தனை விதித்துள்ளது.

இந்தியாவிடம் ஆசியக்கிண்ணத்தை  ஒப்படைக்க பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் பேரவையின்  தலைவருமான மோஷின் நக்வி நிபந்தனை விதித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசியக்கிண்ணத்தில் வெற்றியீட்டிய இந்திய அணி ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவுள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நக்வியின் கைகளால் கோப்பையை பெற மாட்டோம் என்று தெரிவித்தது.  

இதனால் பரிசளிப்பு விழா நடைபெற சில மணிநேரம் தாமதம் ஏற்பட்டதோடு நக்வியும் வேறொருவரின் கைகளால் ஆசியக்கிண்ணத்தை  வழங்குவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதுதொடர்பாக, ஐ.சி.சி.யிடம் புகார் அளிக்கப் போவதாக பி.சி.சிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு ஆசியக்கிண்ணத்தை வழங்க ஆசியக்கிண்ண  நிர்வாகத்திடம் நக்வி ஒரு நிபந்தனை விதித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் முறையான பரிசளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தால், அதில் ஆசியக்கிண்ணத்தை வழங்குவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அப்படியொரு விழாவை ஒருபோதும் நடத்தமாட்டோம் என்று பி.சி.சி.ஐ திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதன்காரணமாக, மும்பையில் உள்ள பி.சி.சி.ஐ தலைமையகத்துக்கு ஆசியக்கிண்ணத்தை கொண்டுவருவதில் தாமதம் நீடிக்கிறது.

இந்திய வீரர்கள்  ஆசியக்கிண்ணம்  இல்லாமல் வெறும் கைகளுடன் புகைப்படங்களை எடுத்து  வெற்றியைக்  கொண்டாடினர்.