இந்தியாவின் பீகாரில் ஆறு தடங்களைக்கொண்ட பாலம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (22) திறந்துவைக்கப்படுகிறது.
கங்கை நதிக்கு மேல் அமைந்துள்ள இப்பாலம் 1.8 கிலோமீட்டர் நீளம்கொண்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாலத்தைத் திறந்துவைக்கிறார்.
புதிய பாலத்தின் மூலம் பீகாரின் வடக்கு, தெற்குப் பகுதிகளுக்கு இடையே கனரக வாகனங்கள் மேற்கொள்ளும் பயணத்தின் தூரம் சுமார் 100 கிலோமீட்டர் குறையும் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
பாட்னா மாவட்டத்தில் உள்ள மொக்காமா நகருக்கும் பெகுருசாய் நகருக்கும் இடையே இந்தப் பாலம் நேரடித் தொடர்பை ஏற்படுத்துகிறது.
திரு மோடி, 2017ஆம் ஆண்டு இப்பாலத்துக்கு அடித்தளம் அமைத்தார். தேசிய விரைவுச்சாலை 31இல் இஃது அங்கம் வகிக்கிறது.
ஏற்கெனவே இருக்கும் இரு தள ரயில், சாலைப் பாலமான ‘ராஜேந்திர சேது’வுக்கு அருகே இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த ‘ராஜேந்திர சேது’ பாலத்தில் பல பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன..
‘சிமாரியா தாம்’ எனும் பிரபல வழிபாட்டுத் தலத்துக்குப் போகவும் பீகாரில் ஆறு தடங்களைக்கொண்ட பாலம் கூடுதல் வசதியாக அமைவதாகக் குறிப்பிடப்படுகிறது.

