போலிப்பரப்புரைக்கு உயிர் கொடுக்கும் அரசியல்வாதிகள்

வடக்கில் அரசுக்கு எதிரான போலிப்பரப்புரைக்கு உயிர் கொடுக்கும் அரசியல்வாதிகள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்த ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரசாரம் முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போலி பரப்புரைக்கு வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர்.

கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை ஐயப்ப சுவாமிமார்களின் யாத்திரையைப் புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியதன் பின்னர், அது தொடர்பான கலந்துரையாடல் கொழும்பு செட்டியார் தெரு கல்யாண முருகன் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

ரவி குருசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அதிதியாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டனர்.

இந்து சமய அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை. அனிருத்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள ஐயப்ப நாமத்தில் இயங்கும் அமைப்புகள், குரு சுவாமிகள் ஐயப்பன் தொடர்புடைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது சுவாமிமார்களால் பரிந்துரைக்கப்பட்ட ஐயப்ப மாலை அணிந்த சுவாமிமார்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், நெறிமுறைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்படது.

நாடளாவிய ரீதியில் இருந்து வருகைதந்த ஐயப்பசாமி குருமார்கள் தங்களது கருத்துகளையும் முன்வைத்தனர்.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரைக் குருசுவாமிகள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர்:

” ஐயப்பன் யாத்திரை கடந்த காலங்களில் புனித யாத்திரையாகப பிரகடனப்படுத்தப்படவில்லை.

இதற்குரிய முயற்சி முன்னெடுக்கப்பட்டும் ஏன் அத்தனை வருடங்கள் நடக்கவில்லை? இனவாத ஆட்சியாளர்கள், இனவாத அமைச்சரவை இருந்ததால்தான் நடக்கவில்லை.

ஆனால் எமது சமதர்ம ஆட்சியில் இனவாதம் இல்லை. மக்கள் நலனுக்கே முக்கியத்துவம், முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

அந்தவகையில் புனித யாத்திரை தொடர்பான அமைச்சரவை பத்திரம் வந்தபோது அதற்கு ஏகமனதாக ஆதரவளிக்கப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முழுமையாக முன்னின்று செயற்பட்ட பிரதி அமைச்சர் தோழர் பிரதீப்புக்கு நன்றி.

இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். சமூக சீர்கேட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, சமூக மாற்றத்துக்கு ஆன்மிகவாதிகளின் பங்களிப்பும் மிக முக்கியம்.

அதேவேளை, வறுமை ஒழிப்புக்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. மறுபுறத்தில் வரி வருமானம் அதிகரித்துள்ளது. பொருளாதார இலக்குகளை அடைந்து வருகின்றோம்.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் பற்றி வங்குரோத்து அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான போலிப்பரப்புரைக்கு உயிர் கொடுக்கும் அரசியல்வாதிகள் வடக்கில் தோல்விகண்ட, மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள்.

க. கிருஷாந்தன், ஊடகச் செயலாளர்

கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சு