WhatsApp Image 2025-08-20 at 16.06.54

எழுத்தாளர் கலாநிதி கருப்பையா பிரபாகரன் நூல் வெளியீடு எதிர்வரும் 23ஆம் திகதி தெல்தோட்டையில் நடைபெறுகிறது.

அவர் எழுதிய சமீபத்திய படைப்பு “அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள் – பகுதி 2” நூல் வெளியீடு மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் தெல்தோட்டையிலுள்ள கோல்டன் ஸ்ரார் மண்டபத்தில் நடைபெறுகிறது.

நூல் வெளியீட்டு விழாவில், மத்திய மாகாண ஆளுநருடன், கண்டி வலயக் கல்வி பணிப்பாளர், பிரதி கல்வி பணிப்பாளர், கோட்டக் கல்வி பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் முதலானோர் கலந்துகொள்கிறார்கள்.

மேலும், பல்கலைக்கழக பேராசிரியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உயர்தர வகுப்பு ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித் துறை ஓய்வுநிலை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

அரசியல் விஞ்ஞானத்தோடு தொடர்புடைய நான்கு நூல்களை இதற்கு முன் வெளியிட்டுள்ள கலாநிதி பிரபாகரன் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி விருது பெற்ற சிறந்த கல்வியாளராகத் திகழ்கிறார்.

பாடசாலை ஆசிரியராகத் தொடங்கி, கலாநிதி பட்டம் உட்பட பல முதுமாணி பட்டங்களைப் பெற்ற அவர், இலங்கையின் பல பகுதிகளில் உயர்தர வகுப்பு, பட்டப்படிப்பு மாணவர்களுக்கான வகுப்புகள், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சிகள், அரசியல் அறிவியல் குறித்த கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் எனப் பல்வேறு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது நூல்கள், இலங்கையின் உயர்தர,பல்கலைக்கழக மாணவர்களிடையே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான கல்வி வளங்களாகும்.

“அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள் – பகுதி 2” நூல், உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக மட்டும் அல்லாமல், அரசியல் அறிவில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் எளிய, தெளிவான மொழியில் எழுதப்பட்டுள்ளது.

அத்துடன் சிக்கலான அரசியல் கருத்துகளையும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நூல் வெளியீட்டின் நோக்கம், அரசியல் அறிவை இளைஞர் தலைமுறைக்குப் பரவச் செய்வதோடு மட்டுமல்லாது, கல்வி, அரசியல் அறிவியல் இடையேயான தொடர்பை வலுப்படுத்தவும் உதவும்.

கல்வித் துறையினருக்கிடையேயான சிந்தனை பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் இந்த நூல் வழிவகுக்கும்.

கருப்பையா பிரபாகரன் நூல் வெளியீடு சிறக்க கல்வித் துறையின் அனைத்து உறுப்பினர்களும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆலோசகர்கள், மாணவர்கள் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.

பன்விலை ம. நவநீதன்