காணாமற்போன குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டது

மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கப் பகுதியில் நேற்று (07) காணாமற்போன குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டது.

மஸ்கெலியா புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த வேலு மருதமுத்து வயது 55 உடையவர் நேற்றுக் காலை 10.57 மணி முதல் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதுபற்றி அவரது மகன் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதனைத் தொடர்ந்து மவுசாகலை நீர்த் தேக்கத்தில் இன்று மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவின் வேண்டுகோளின் படி கொழும்பு கடற்படைத் தலைமையக சுழி மோசடிகள் 8 பேர் வருகை தந்தனர்.

அவர்களோடு ஹட்டன் பொலிஸ் நிலைய மோப்பநாயுடன் அதன் ஊழியர்களும் வருகை தந்து இன்று மதியம் பல மணி நேரம் தேடி நீர்த்தேக்கத்தின் புரவுன்லோ வட்டாரத்தில் இருந்து சடலத்தை மீட்டனர்.

சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள சவச்சாலையில் வைக்கப் பட்டு உடற் கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இதற்கான முழுமையான பொறுப்பை வட்டாரத்திற்குப் பொறுப்பான சார்ஜன்ற் வீ. பேரின்பநாயகம், ஜீ .விக்னேஸ்வராஜா ஆகியோர் மேற்கொண்டு வந்தனர்.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

காணாமற்போன குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டது