வர்த்தகர்களால் தாக்கப்பட்டவருக்கு நீதி வேண்டும் என்று சாமிமலை – கவரவலை தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த 30.07.2025 அன்று சாமிமலை நகரில் துரைராஜ் சண்முகநாதன் என்ற கவரவலை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கடுமையாக மூன்று வர்த்தகர்கள் தாக்கியுள்ளனர்.
இதன் பின்னர் இவர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப் பட்டு அங்கிருந்து கண்டி போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.
கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மீண்டும் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் செய்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்தனர்.
அவர்களை ஹட்டன் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியபோது தலா ஐம்பதாயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வரை பாதிக்கப்பட்ட நபர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் வீடு திரும்பவில்லை, ஆனால், தாக்கிய சந்தேக நபர்கள் வெளியே வந்து தங்களுடைய வாழ்வாதாரத்தைத் தொடங்கி விட்டார்கள்.
தோட்டத் தொழிலாளர்களை நம்பி வாழ்வாதார்த்தைக் கொண்டு செல்லும் முதலாளிமார்கள் எங்களையே தாக்குகின்றார்கள்.
இதற்கொரு நியாயம் இல்லையா? என சாமிமலை கவரவலை பகுதியில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பினர். வர்த்தகர்களால் தாக்கப்பட்டவருக்கு நீதி வேண்டும் என்று கோருகின்றனர்.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள், சாமிமலை செ. ஞானராஜ்
