உத்தரகாண்ட் மேகவெடிப்பில் சிக்கிய 130பேர் மீட்பு

இந்தியாவின் உத்தரகாண்ட் மேகவெடிப்பில் சிக்கிய 130பேர் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் தாமியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்புகொண்டு பேசியபோது அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தின் ஹர்சில் அருகே உள்ள தாராலி பகுதியில் நேற்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டுக் கனமழை பெய்தது.

இந்த மேக வெடிப்பினைத் தொடர்ந்து அங்குள்ள கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கில் அங்குள்ள கட்டடங்கள் அடித்துச்செல்லப்பட்டன.

மேலும் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாகவும் மண்ணில் பலர் புதையுண்டதாகவும் அஞ்சப்படுகிறது.

உள்ளூர் காவல்துறை, எஸ். டி. ஆர். எப். இராணுவமும் தீயணைப்புப் படைகளின் மீட்புக் குழுக்களும் சம்பவ இடத்திற்குச் சென்று தேடுதல், மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் பொதுமக்கள் நால்வர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 60 பேர் காணாமற்போயுள்ளனர். பத்து இராணுவத்தினருடன் முகாமொன்று நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இருபதுக்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், வீடுகள், கடைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அங்குள்ள சிவனாலயம் மண்ணில் புதையுண்டுள்ளது. சிவன் சிலையும் புதையுண்டுள்ளது.

உத்தரகாண்ட் மேகவெடிப்பில் சிக்கிய 130பேர் மீட்பு

இந்த நிலையில் உத்தரகாண்ட் மேகவெடிப்பில் சிக்கிய 130பேர் மீட்பு என்ற தகவல் கிடைத்துள்ளது. 130பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருடன் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி நிலவரத்தைக் கேட்டறிந்துகொண்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகளுக்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தப் பகுதிகளில் எதிர்வரும் 10ஆம் திகதிவரை மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் இதனால் மலைப்பகுதிகளில் மிகவும் அவதானமாக இரக்குமாறும் அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.