செம்மணி சான்றுப்பொருள்களைக் காட்சிப்படுத்த நடவடிக்கை

செம்மணி சான்றுப்பொருள்களைக் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருள்களைப் பார்வையிடுவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும்.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருள்களை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாளம் காண உதவும் வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலை விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி, யாழ் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில், இந்தச் சான்றுப் பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05-08-2025) பிற்பகல் 1:30 முதல் மாலை 5:00 மணி வரை, அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இப்பொருள்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.

செம்மணி புதைகுழிகளில் இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருள்களில் புத்தகப் பைகள், சிறுவர்களின் காலணிகள், குழந்தையின் பால் போத்தல், வளையல்கள் உள்ளிட்ட 54 பொருள்கள் அடங்கும்.

இவை தற்போது நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தச் செம்மணி சான்றுப்பொருள்களைக் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இப்பொருள்களை அடையாளம் காணக்கூடியவர்கள், நீதிமன்றத்திற்கு அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்து, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சான்றுப் பொருள்களைப் பார்வையிட வருவோருக்கான கட்டுப்பாடுகள், நடைமுறைகள் தொடர்பான விபரங்கள் இன்று (02) அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.