வத்தளையில் ஒருவர் குத்திக் கொலை

வத்தளையில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை, ஹேகித்தை, அல்விஸ்வத்தை பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில், முகமூடி அணிந்த நால்வர் அவரைத் தாக்கிக் கொலை செய்துள்ளனர். இவர்கள் முச்சக்கர வண்டியில் வந்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

சம்பவத்தின் போது, உயிரிழந்தவரின் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் இருந்துள்ளனர்.

கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 43 வயதான இந்த நபர், சில மாதங்களுக்கு முன்னர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துத் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு மஹாபாகே பகுதியில் இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவத்திற்கு இவர் உடந்தையாக இருந்தவர் என்றும் அண்மையில் சிறையிலிருந்து பிணையில் வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.