ஊழல் செய்யாதவர்களை அரசாங்கம் பாதுகாக்கும்

சுகாதாரத் துறையில் ஊழல் செய்யாதவர்களை அரசாங்கம் பாதுகாக்கும் என்று சுகாதார அமைச்சசர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) மட்டக்களப்புவில் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பிராந்திய வைத்தியசாலைகளுக்கான முக்கிய தேவைகளுக்கான நிதி உதவிகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மாகாணத்திற்கும் மட்டக்களப்புவிற்கும் ஒதுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் கூறினார்.

மட்டக்களப்புவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதல் தடவையாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று விஜயம் செய்தார்.

நண்பகல் மாவட்ட பிராந்திய சுகாதார சேவை அலுவலகத்துக்கு விஜயம் செய்து மாவட்டத்திலுள்ள பிரதேச வைத்தியசாலைகளின் தற்போதைய நிலைமைகள் பற்றி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் பிரதேச வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டு தங்களது முக்கிய தேவைகள் பற்றி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்

அப்போது ஊழல் செய்யாதவர்களை அரசாங்கம் பாதுகாக்கும் என்றும் எதிர்வரும் காலத்தில் கட்டம் கட்டமாக தேவைகள் நிறைவேற்றித் தரப்படும் என்றும் அமைச்சர் இங்குத் தெரிவித்தார்

இதேவேளை கிழக்கு மாகாண சுகாதாரத் துறையினரால் அமைச்சர் இங்கு கௌரவிக்கப்பட்டார்.

அமைச்சரின் இந்த விஜயத்தின் போது மாகாண சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகள், பிரதேச வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர், வைத்தியர்கள், பிராந்திய சுகாதாரப் பணிமனையின் ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வரதன், மட்டக்களப்பு