மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் மொகமதுக்கு 100 வயது பூர்த்தியாகிறது.
திரு. மஹதிர் மொகமது கடந்த ஜூலை 10 ஆம் திகதி 100ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
நவீன மலேசியாவின் பிதாமகன் எனப் போற்றப்படும் திரு.மஹதிர் மொகமது, ஆகக் கூடுதல் வயது நிரம்பி உயிருடன் இருக்கும் மலேசியாவின் முன்னாள் பிரதமர்களுள் ஒருவர்.
அதேநேரம் அவரது மனைவி சித்தி ஹஸ்மா மிகக் கூடுதல் வயதுடன் வாழும் ஒரே முன்னாள் பிரதமரின் மனைவி என்ற பெருமைக்கு உரியவராகிறார். அவருக்குத் தற்போது வயது 99.
மஹதிர் மொகமது 1925 ஜூலை மாதம் 10 ஆம் திகதி பிறந்தவர். அவரது மனைவி 1926 ஜூலை மாதம் 12 ஆம் திகதி பிறந்தவர். இருவரும் தொழில் ரீதியாக மருத்துவர்கள்.

மஹதிர் அவர்கள் 1964 இல் முதன் முதலாகப் பாராளுமன்றத்திற்குப் பிரவேசிக்கிறார். 1981 இல் பிரதமர் பதவியேற்று 2003 வரை மலேசியாவை ஆண்டார். பின்னர் அவரது 93ஆவது வயதில் 2018இல் ஏழாவது பிரதமராக மீண்டும் தெரிவானார்.
பாராளுமன்றத்தைக் கிழவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பரவலாக விமர்சிக்கப்படும் நிலையில், திரு. மஹதிர் அவர்களின் அர்ப்பணிப்பான சேவை மக்களைக் கவர்ந்திருக்கிறது.
எல்லாமாக 24 ஆண்டுகள் மலேசியாவின் பிரதமராக திரு. மஹதிர் ஆட்சி செய்திருக்கிறார்.

2001இல் செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைக்கோபுரத் தாக்குதலின்போது அமெரிக்காவிற்கு ஆதரவாக, பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.
எனினும், 2003இல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்ததை அவர் வன்மையாகக் கண்டித்தார்.
மஹதிர்- சித்தி ஹஸ்மா தம்பதிக்கு ஒரு பெண் அடங்கலாக ஏழு பிள்ளைகள். திருமதி ஹஸ்மா அவர் பெற்றோரின் பத்துப் பிள்ளைகளுன் ஆறாமவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பதிவை இடுவதற்குத் திரு. மஹதிர் மொகமது ஒரு மகத்தான மனிதர் என்பது மட்டும் காரணம் அல்ல. அவர் பிறந்து ஓராண்டுக்குப் பின்னர் அவர் பிறந்த அதே மாதத்தில் மூன்று நாள் கழித்து அவர் மனைவி பிறந்திருக்கிறார் என்பதும்தான்.
மகத்தான மனிதர்களை நாம் வாழும்போதே நினைவுகூர்வது முக்கியமாகும். அந்த வகையில் மலேசிய மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மஹதிர் மொகமதுக்கு 100 வயது பிறந்த நாளில் அவரை நாமும் வாழத்துவோம்!

