மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை தீவிரம்

வடக்கு, கிழக்கைவிடவும் மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை தீவிரம் காணப்படுவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வாழ்வியல் பிரச்சினை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை உள்ளிட்டவை மலையத்திலேயே அதிகளவு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இனப்படுகொலை, போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பைக் குற்றவாளியாகக் காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது.

என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிறிதரன் தெரிவித்தார்.

கொட்டகலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களிடம் அவர் கருத்து தெரிவித்தார்.

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் உட்பட சில விடயங்களைத் தமிழ் தரப்புகள்தான் செய்தன என்பதுபோல் வெளியில் ஒரு மாயை காட்டப்படுகின்றது.

இதற்கு பின்னால் இருந்து ஆட்சி அமைத்த கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த குடும்பம் மீது இதுவரையில் எந்த பாய்ச்சல்களையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை.

இன அழிப்பு, போர்க்குற்றங்களைச் செய்த இராணுவத் தளபதிகள் மீதோ அதனை மேற்கொண்ட அரசுகள்மீதோ எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் தமிழ்த் தரப்பைக் குற்றவாளியாகக் காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது. இது தொடர்பில் நாம் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும்.”

10 பரம்பரையாக இந்நாட்டுக்கு அழைத்தும் ஒரு துண்டு காணிகூட மலையக மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

‘மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக இம்மண்ணில் வாழ்கின்றனர்.

நபரொருவர், பிரிட்டனுக்கோ கனடாவுக்கோ சென்றால் அங்கு 3 அல்லது ஐந்து வருடங்களில் குடியுரிமை கிடைக்கின்றது. வீடு வழங்கப்படுகின்றது. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கின்றது.

ஆனால் இந்நாட்டுக்காக 10 பரம்பரையாக உழைத்த மக்களுக்கு ஒரு துண்டு காணி கூட இன்னும் வழங்கப்படவில்லை.

தொடர்ந்தும் காணி உரிமை அற்றவர்களாகவே வைக்கப்பட்டுவருகின்றனர். மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் அவர்களுக்கு காணி உரிமையை வழங்கவில்லை.

ஒரு கொட்டகையை அமைப்பதாக இருந்தால்கூட நிர்வாகத்திடம் அனுமதி பெறவேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அவர்கள் அனுமதி வழங்காத நிலையும் நீடிக்கின்றது.

வடக்கு, கிழக்கைவிடவும் மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை தீவிரம். வாழ்வியல் பிரச்சினை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை உள்ளிட்டவை அதிகளவு இங்குதான் காணப்படுகின்றன.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற நாளாந்த சம்பளம் போதுமானது அல்ல.

தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு ஐயாயிரம் ரூபாய்கூட போதாது. நியாயமான, நிரந்தர சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

அதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.” – என்றார்.

க. கிருஷாந்தன்