வற் வரியை மீளச்செலுத்தும் பொறிமுறை

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு வற் வரியை மீளச்செலுத்தும் பொறிமுறை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் வற் வரியை மீளச் செலுத்தும் கருமபீடம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் பொருள்களைக் கொள்வனவு செய்யும் போது செலுத்தும் பெறமதி சேர் வரியை மீண்டும் பெற்றுக் கொடுக்கும் முன்னரங்க அலுவலகமாக இது செயற்படும்.

கைத்தொழில், தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தொழில் அமைச்சரும் நிதி பிரதி அமைச்சருமான அணில் ஜெயந்த ஆகியோர் தலைமையில் நேற்று (04) அலுவலகத் திறப்புவிழா நடைபெற்றது.

இலங்கையில் 90 நாள்களுக்கு குறைவாகத் தங்கி இருக்கும் போது 50,000 ரூபாயைவிட அதிகமான தொகை VAT வரியாக செலுத்திய சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்கள் செலுத்திய VAT வரியை இங்கு மீளப் பெற்றுக் கொள்ளலாம்.

சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் உற்பத்திகளை கொள்வனவு செய்வதை ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையில் வரி சேகரிப்பு முறையை ஒழுங்குமுறை படுத்துவதற்காகவும் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வற் வரியை மீளச்செலுத்தும் பொறிமுறை தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு உண்மையான வருமானம் கிடைக்கப்பெறும் என்று அமைச்சர் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டார்.

வற் வரியைச் செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்காகப் பொய்யான வங்கிக் கணக்குகள் திறக்கப்படும் சந்தர்ப்பங்கள் இனி ஏற்படாது என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025