அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்பேன்

புகாரளித்த பேராசிரியை நிகிதா: கோப்புப் படம்: ஊடகம்
காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்பேன் என்று அவருக்கு எதிராகப் புகார் செய்த பேராசிரியை நிகிதா தெரிவித்துள்ளார்.
குரல் பதிவொன்றின் மூலம் பேராசிரியை நிகிதா இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
கோவிலுக்கு வந்த திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்த பேராசிரியை நிகிதா தன்னுடைய நகைகள் காணாமல்போனதாக காவல்துறையில் புகார் அளித்தார்
அதனால், அந்தக் கோயிலின் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் மீது காவல்துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால் காவல்துறையினர் அவரை தாறுமாறாக அடித்ததில் அஜித்குமார் உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நிகிதா குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்பேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“இதனை மிகவும் வேதனையுடன் நான் வெளியிடுகிறேன். பெண் ஒருவர் பல்வேறு பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டம் முடித்து கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து சமூகத்தில் மிக உயரிய பொறுப்பிற்கு வருவது மிகப்பெரிய சவால்.
“பெண்ணின் வளர்ச்சியை சமூகத்தில் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதுதான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. அஜித்குமார் இறந்தது மிகவும் வேதனையான சம்பவம். சம்பவத்தன்று புகார் தெரிவித்ததோடு நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம்.
“அதன்பின் என்ன நடந்தது எனத் தெரியாது. என்னுடைய தந்தை முக்கிய பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு பலதரப்பினரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகப் புகார் வந்துள்ளது.
ஓய்வு பெற்ற பின்பு அதிகாரி ஒருவருக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்பது இந்த சமூகத்தில் தெரிந்த ஒன்று.
“அப்படி இருக்கும்போது இந்தக் குற்றச்சாட்டை எப்படி ஏற்க முடியும். திண்டுக்கல்லில் கல்லூரியில் பணியாற்றி வரும் நான் ஒரு நாள் மட்டும் கல்லூரிக்குச் சென்றுவிட்டு தொடர்ந்து விடுப்பில் உள்ளேன்.
எனது தாய் கீழே விழுந்து அடிபட்டுப் பேச முடியாத அளவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு உதவியாக உள்ளேன்.
“தற்போது எனக்குச் சோதனையான காலம். என்னைப் பற்றி இப்போது பல்வேறு தரப்பினர் பேட்டியளித்து வருகிறார்கள். அவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று எனக்குத் தெரியும்.
என்னுடைய சொந்த வாழ்க்கையைப் பேசுவதற்கு முன்பு அவர்களுடைய நிலையை யோசித்துப் பார்க்க வேண்டும். எனக்குப் பெரிய அதிகாரிகள், தமிழக முதலமைச்சர் முதலானோரை நன்கு தெரியும்,
அதைப் பயன்படுத்தி தான் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது,” என்று குரல் பதிவில் நிகிதா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நிகிதா தன் மீதான மோசடி வழக்குகளில் காவல்துறையிடம் சிக்காமல் இருக்க கோவையில் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் அமர்ந்திருந்த காணொலி வெளியாகியுள்ளது.
