சதொசவுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பும் வாடிக்கையாளர்கள்

சதொசவுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பும் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஒரு காலத்தில் மிகக் குறைந்த விலையில் தரமான அத்தியாவசிய பொருள்களைக் கொள்வனவு செய்யக்கூடியதாக இந்த சதொச விளங்கியது. இப்போதும் அவ்வாறுதான் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் அறிவிக்கின்றன.
கூட்டுறவு மொத்த விற்பனவு நிலையம் – கூ.மொ. வி – என்று ஆரம்பத்தில் அழகாகத் தமிழில் அழைக்கப்பட்டாலும், இப்போது சதொச என்றே பழகிப்போய்விட்டது.
சதொச என்பது சமுப்பகார தொக வெளந்த சங்ஸ்தாவ என்ற சிங்களப் பதத்தின் சுருக்கமாகும். அது கிடந்துவிட்டுப்போகட்டும். இந்த சதொசக்களில் அரசாங்கம் சொல்வதைப்போன்று குறைந்த விலையும் இல்லை; பொருள்களும் இல்லை.
எந்த சதொசவுக்குச் சென்றாலும் பக்கிகள் காலியாகக் கிடக்கின்றன. கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இதுதான் நிலை என்றால், கிராமங்களில் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்துக்கொள்ள முடியும்.
இப்போது தனியார் அங்காடிகள் பெருகிவிட்டன. நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. ஆனால், இந்த சதொசக்கள் நாளுக்கு நாள் செத்து வருகின்றன. அங்குப் பணிபுரியும் ஊழியர்களும் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர்.
புதிது புதிதாகச் சட்டங்களை இயற்றுவதைவிட இருக்கும் இவ்வாறான அரச நிறுவனங்களுக்குச் சென்று அதிரடி நடவடிக்கைகளை அல்லவா அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகளைக் கைதுசெய்து வழக்கு போடுவதால் பொது மக்களின் வயிறு நிரம்பிடப்போவதில்லை. இந்த அரசாங்கம் இன்னும் உற்சாகமாகச் செயற்பட வேண்டும் என்பது மக்களின் கருத்து.
இதுதான் சதொச செல்வோரின் ஒருமித்த கருத்து. மக்களுக்குக் குறைந்த விலையில் பொருள்களைக் கொள்வனவு செய்யலாம் என்றால், அங்கே பொருள்கள் இல்லாவிட்டால் என்ன செய்வது?
எனவே, சம்பந்தப்பட்ட அமைச்சர் நாட்டிலுள்ள சதொசக்களுக்குக் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகத் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
ஆசிரியர் – மதிமுரசு
