தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை வரவேற்போம்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை வரவேற்போம் என தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் தேமுதிக சார்பில் மாம்பழ விவசாயிகளுக்காக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, மா விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறுவதும், மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறுவதும் அவரவர் கருத்து.
“தேமுதிகவைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சியை வரவேற்கிறோம். தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி 9ஆம் தேதி அறிவிப்போம்,” என்றார் பிரேமலதா.
பாஜக, திமுகவை எதிர்க்கும் கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “அதைக் காலம்தான் முடிவு செய்யும்,” என்றார்.
தற்போது பாஜக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் தேமுதிக, அதே அணியில் நீடிக்குமா அல்லது திமுக கூட்டணியுடன் இணையுமா என்பது இதுவரை உறுதியாகவில்லை.
இருதரப்புடனும் அக்கட்சித் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
