பராட்டே சட்டம் அமுல்: சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதை!

பராட்டே சட்டம் அமுல் நேற்று நள்ளிரவிலிருந்து அமுலானமை சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடியுள்ளார்.
நள்ளிரவுக்குப் பின்னர் பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளமையினால் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
இன்று முதல் இந்தத் தரப்பினரின் சொத்துகள் கடன் நிலுவையின் காரணமாக ஏலம் விடப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் பங்களிக்கும் தரப்பினரின் பங்களிப்பு குறைவடையும். அத்துடன், சுமார் 4 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, பரேட் சட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தி, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்குக் கடன் மறுசீரமைப்பு, வட்டி சலுகைகள் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முந்தைய அரசாங்கம் போலவே, தற்போதைய அரசாங்கமும் பொய்கள் மற்றும் தேர்தல் நோக்கான நடவடிக்கைகள் மூலம் இந்தத் தரப்பினரை ஏமாற்றியுள்ளதாகவும், நீடித்த தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை மற்றும் நிறைவேற்று அதிகாரமுள்ள அரசாங்கம் இந்த பிரச்சினையிலிருந்து விலக முடியாது எனவும், அந்தத் தரப்பினருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பரேட் சட்டத்தை உடனடியாக இடைநிறுத்தி, நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முனைவோருக்கு மீண்டெழும் வாய்ப்பு தரும் வகையில் தீர்வுகள் வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
