தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் அரசமைப்பு நீதிமன்றம் பெடோங்டார்ன் ஷினவாத்தை பிரதமர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.
அண்மையில் திருவாட்டி ஷினவாத், 38, கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சன்னிடம் தொலைப்பேசியில் பேசினார். அந்தத் தொலைபேசி உரையாடல் சமூக ஊடகத்தில் கசிந்து பெரும் சர்ச்சையாக மாறியது.
இந்தச் சர்ச்சையால் ஷினவாத்தின் பதவிக்கும் ஆட்சிக்கும் பெரிய சிக்கல் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்த ஷினவாத்தை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் எழுப்பினர்.
இதையடுத்து 36 செனட் உறுப்பினர்கள் தாய்லாந்தின் அரசமைப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
மனுவில் திருவாட்டி நேர்மை இல்லாமல் நடந்துகொண்டார், தெரிந்தே சட்டத்தை மீறினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில், மனுவை ஏறக்கொண்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
திருவாட்டி ஷினவாத்திற்கு பதில் துணைப் பிரதமர் அவர்கள் தாய்லாந்தைத் தற்காலிகமாக வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றம் விசாரணையை முடிக்கும் வரை திருவாட்டி ஷினவாத் அமைச்சரவையில் தொடர்வார். அவர் இப்போது கலாசார அமைச்சராக உள்ளார்.
சில நாள்களுக்கு முன்னர் தான் தாய்லாந்து அமைச்சரவையைத் திருவாட்டி ஷினவாத் மாற்றியமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தின் நடவடிக்கை குறித்து தாய்லாந்து அரசாங்கம் உடனடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
கசிந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாகத் திருவாட்டி ஷினவாத் தாய்லாந்து மக்களிடம் மன்னிப்பு கோரினார்.
மேலும் திருவாட்டி ஷினவாத்தை எதிர்த்து மக்கள் சிலர் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். இப்போது தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 10 மாதங்களாகப் பிரதமர் பொறுப்பில் இருந்த திருவாட்டி ஷினவாத்திற்கு தொடக்கம் முதலே நெருக்கடி கொடுக்கப்பட்டது.
செல்வந்தர்களுக்குச் சாதமாக இருக்கிறார், பொருளியலைச் சரியாகக் கையாளவில்லை எனப் பல தரப்பிலிருந்தும் குறைகூறப்பட்டது.
மூலம்: தமிழ்முரசு
