டிரம்பிற்குச் சாதகமாக மற்றொரு நீதிமன்றத் தீர்ப்பு

டிரம்பிற்குச் சாதகமாக மற்றொரு நீதிமன்றத் தீர்ப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குச் சாதகமாக மற்றொரு நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நீதிமன்ற விசாரணைப் பருவத்தின் கடைசி நாளில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு அவர் எதிர்பார்த்த வெற்றியைத் தந்துள்ளது.

அதன்படி, அமெரிக்க அதிபரின் அதிகார வரம்பைப் பயன்படுத்திப் பார்க்கும் விதமாக அவர் தனக்கென வகுத்துள்ள சர்ச்சைக்குரிய, பரந்த அடிப்படையிலான திட்டங்களை அமல்படுத்துவது அவருக்கு எளிதாகியுள்ளது.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஆறு பழமைவாதப் போக்குடைய நீதிபதிகள் அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக தீர்ப்பளிக்க மூன்று தாராளவாத நீதிபதிகள் அதற்கு எதிராக மாற்றுக் கருத்து தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து ஜூன் 27ஆம் திகதி பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு அதிபரின் கொள்கைகளைத் தடுக்கும் நீதிபதிகளின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது.

இதனால், நீதித் துறைக்கும் அதிபருக்கும் இடையிலான அதிகார வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க கூட்டரசு நீதிபதிகள் மூவர் ஜனவரி மாதம் பிறப்பை வைத்து குடியுரிமை பெறுவதற்கு வரம்பு விதித்த அதிபரின் நிர்வாக ஆணைக்குத் தடை விதித்தனர்.

இதைத் தொடர்ந்து அந்த நீதிபதிகள் பிறப்பித்த ஆணையின் வரம்பைக் குறைக்க வேண்டும் என மேல்முறையீடு செய்திருந்தார். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறுவர் மேற்கூறிய தீர்ப்பை வழங்கினர்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அரசாங்கத்தின் நிர்வாக விருப்ப அடிப்படையிலான அதிகார வரம்பை வலுப்படுத்தியுள்ளது என்றும் நீதித் துறையின் மேற்பார்வையிடும் அதிகாரத்தை தொடர்ந்து வலுவிழக்கச் செய்துவிட்டது என்றும் பால் ரோசன்வெய்க் என்ற வழக்கறிஞர் கருத்துரைத்துள்ளார்.

இவர் குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகத்தில் பணியாற்றிய வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 27ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, நீதிபதிகள் தனிநபர்களாகவோ, ஒரு குழுவாகவோ நீதிமன்றத்தை நாடுபவர்களுக்கு மட்டுமே அவர்கள் கேட்கும் நிவாரணத்தை வழங்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

எனினும், அதிபர் டிரம்பிற்குச் சாதகமாக மற்றொரு நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பபட்டிருந்தாலும், இந்தத் தீர்ப்பு அதிபர் டிரம்ப்பின் உத்தரவுகளை உடனடியாக அனுமதிக்கும் விதத்தில் அமையவில்லை என்று கூறப்படுகிறது.

மாறாக, கீழ் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பின் வரம்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றே கேட்டுக்கொள்வதாக கூறப்படுகிறது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.